திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஞ்சலி ஆத்துமேடு கரூர் சாலையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார்m இதனையடுத்து மகளிர் சுய உதவி குழு மூலம் கிடைத்த 40,000 ரூபாய் கடன் தொகை அஞ்சலியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

நேற்று காலை அஞ்சலி அந்த பணத்தை எடுப்பதற்காக தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வங்கிக்கு சென்றார். ஆனால் புதிய ஏடிஎம் கார்டை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் அஞ்சலி தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஏடிஎம் கார்டு ஆக்டிவேஷன் செய்து பணத்தை எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அஞ்சலி ஏடிஎம் கார்டை அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கார்டை ஆக்டிவேஷன் செய்து விட்டு அந்த வாலிபர் வேறு ஒரு ஏடிஎம் கார்டை அஞ்சலிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து வங்கியில் தரும் ஓடிபி எண்ணை பயன்படுத்தினால் தான் பணம் எடுக்க முடியும் என கூறி அஞ்சலியை வங்கிக்கு அனுப்பி வைத்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே அஞ்சலியின் வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியதை கேட்டு அஞ்சலி அதிர்ச்சியடைந்தார்.

அந்த வாலிபர் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதை அறிந்து கதறி அழுதார். இந்த காட்சியை பார்த்து வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் வேதனை அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.