
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது நந்தலால்பூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப், அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி குஞ்சனுடன், இருவருக்கும் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒருவரையொருவர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்ததால், சந்தீப் மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்றும், விவாகரத்து பெற முயன்றுவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சந்தீப் தனது மனைவிக்காக சௌமீன் (நூடுல்ஸ்) வாங்கி வந்துள்ளார். ஆனால், குஞ்சன் அதனை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சந்தீப் மனைவியை தாக்கத் தொடங்க, குஞ்சன் அவரை எதிர்த்து, கன்னத்தில் அறைந்தார். இதனால், ஆத்திரமடைந்த சந்தீப், மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
பின்னர், தனது மகன்களை அழைத்து, மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் சென்றதும் தன் மனைவியை கொன்றதாக கூறி, நேராக காவல்நிலையத்தில் சரணடைந்தார். குஞ்சனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டு, சந்தீப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.