ஹைதராபாத் சந்தாநகர் பகுதியில் பள்ளிச் சீருடையை முறையாக அணியவில்லை எனக் கூறி சக மாணவர்கள் தொடர்ச்சியாகக் கேலி செய்ததால் மனமுடைந்த 9 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரியும் சங்கர் என்பவரது மகன் பிரசாந்த் (9), அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்தான். கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அடையாள அட்டை கயிற்றால் (Lanyard) கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனை காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது மகனை சக மாணவர்கள் சீருடை தொடர்பாகத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று தந்தை சங்கர் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பள்ளியில் நிலவும் ராகிங் மற்றும் கேலி செய்தல் தொடர்பான விதிமுறைகளின் கீழ் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் கல்வி நிலையங்களில் மாணவர்களின் மனநல ஆலோசனையின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளதாகக் கூறி குழந்தைகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
