புகழ்பெற்ற ஆலன் (Allen) பயிற்சி மைய வகுப்பறையில் இரு மாணவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அல்லது ஜெய்ப்பூர் கிளையாக இருக்கலாம் எனக் கருதப்படும் அந்த பயிற்சி மையத்தில், வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது கருப்பு நிற ஜாக்கெட் அணிந்த மாணவருக்கும், சாம்பல் நிற சட்டை அணிந்த மாணவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், “என்ன செய்துவிடுவாய்?” என ஒரு மாணவர் ஆக்ரோஷமாக சவால் விட, ஆத்திரமடைந்த மற்றொருவர் அவரை தாக்கத் தொடங்கினார். பதிலுக்கு மற்றவரும் தாக்க, வகுப்பறை ஒரு நொடியில் போர்க்களமாக மாறியது. பெஞ்சுகளுக்கு இடையே இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.
Allen Classes Student Fight Video Got Viral Again 💀
Inka Toh Yah Daily Ka Ho Gaya Hai 🥲
Really A Kaleshi Institute 🤕 pic.twitter.com/Mvjvn28rZ6
— Alisha (@alisha_sunona) April 19, 2026
சண்டையின் தீவிரத்தை உணர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர், “என்னை விட்டுவிடு!” என்று அலறியும், மற்றவர் விடாமல் தாக்கியது வீடியோவில் பதிவாகியுள்ளது. அங்கிருந்த சக மாணவர்கள், “நிறுத்துங்கள்.. விட்டுவிடுங்கள்!” என கூச்சலிட்டபடி இருவரையும் பிரிக்க முயன்றனர். ஒரு மாணவர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் தனித்தனியாகப் பிரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஆலன் இன்ஸ்டிடியூட் கருதப்பட்டாலும், சமீபகாலமாக அங்குள்ள மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது ஒரு ‘மீம்’ (Meme) கலாச்சாரமாகவே மாறிவிட்டது. குறிப்பாக கோட்டா மற்றும் ஜெய்ப்பூர் வளாகங்களில் நடக்கும் இதுபோன்ற மோதல்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். போட்டித் தேர்வுகளின் அதிகப்படியான அழுத்தம் மாணவர்களின் மனநிலையை பாதிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கத்தை கண்காணிக்க முறையான கட்டமைப்பு தேவை என கோரிக்கை எழுந்துள்ளது. கல்வி கற்கும் இடமா அல்லது மல்யுத்தம் புரியும் இடமா? என இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்த மோதலுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், கல்விச் சூழலில் நிலவும் இத்தகைய வன்முறை கலாச்சாரம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
