மத்தியப் பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் இளம் வழக்கறிஞர், மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அதாவது மண்டலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த ஸ்வஸ்திக் படிதார் (28) என்ற இளம் வழக்கறிஞர், இந்தூரில் தனது பணிகளை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தப்லா கிராமம் அருகே வந்தபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்வஸ்திக், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஸ்வஸ்திக் தனது ஒரு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஐந்து சகோதரிகளின் ஒரே தம்பியான இவரைப் படிக்க வைக்க, மூன்று சகோதரிகள் தங்களின் திருமண ஆசையையே தியாகம் செய்துள்ளனர். சமீபத்தில்தான் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய அவர், குடும்பப் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. அவரது இறுதிச் சடங்கில் சகோதரிகளே பாடையைத் சுமந்து சென்றது கலங்க வைக்கும் வகையில் இருந்தது.
இதேபோன்று அலிராஜ்பூர் மாவட்டம் போரி கிராமத்தில், சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் திருமண நிகழ்ச்சி முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த மூன்று நண்பர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. வீட்டிற்கு 100 மீட்டர் தொலைவில் இருந்தபோது நேரிட்ட இந்த விபத்தில் அனில் (14), ரோஷன் (17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சவான் (14) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா ரூ. 10,000 உடனடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மும்பை – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சோட்டு (3) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயமடைந்த தந்தை காலு மற்றும் தாய் சவ்லி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் காலுவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தப்பியோடிய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
