உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில், விருந்தினர் போல கோட் சூட் அணிந்து வந்த நபர், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பையைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் உள்ள ஒரு ‘ திருமண மண்டபத்தில் நேற்று மதியம் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் பெண் வீட்டார் மற்றும் மணமகன் வீட்டார் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழா களைகட்டியிருந்த வேளையில், மிகவும் நாகரிகமான முறையில் கோட் சூட் அணிந்து வந்த ஒரு இளைஞர், அங்கிருந்தவர்களிடம் எந்தவித சந்தேகமும் ஏற்படாதவாறு வலம் வந்துள்ளார்.
விருந்தினர்களுடன் அமர்ந்து நிதானமாக உணவு அருந்திய அந்த நபர், பின்னர் அங்கிருந்தவர்களின் கவனம் சிதறிய நேரத்தில், சுமார் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் இருந்த பையை லாவகமாகத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
यूपी : नोएडा के बैंक्वेट हॉल में सूट–बूट पहनकर आया चोर कैश–ज्वेलरी से भरा बैग चुराकर ले गया !! pic.twitter.com/IluhPw2h6A
— Sachin Gupta (@Sachingupta) April 20, 2026
சிறிது நேரம் கழித்துப் பையைத் தேடிய பெண் வீட்டார், அது காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோட் சூட் அணிந்த அந்த இளைஞர் மிகவும் திட்டமிட்டுத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. முதலில் மண்டபத்தை நோட்டமிட்ட அவர், சரியான தருணம் பார்த்துப் பையை எடுத்துச் செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மணமகன் வீட்டார் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றும், பெண் வீட்டார் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பையில் இருந்த நகை மற்றும் பணத்தின் சரியான மதிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். மேலும் நிச்சயதார்த்த விழாவில் புகுந்து ‘கோட் சூட்’ அணிந்த நபர் கைவரிசை காட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
