புதுச்சேரி அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவருடைய மனைவி பரிமளம் ஆவார். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், ஹேமச்சந்திரன்(20) என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேரும் தற்போது தாயுடன் வசிக்கின்றனர்.

இதில் ஹேமச்சந்திரன் ஏற்கனவே 2 முறை நீட் நுழைவுத் தேர்வு எழுதி உள்ளார். எனினும் அதில் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதையடுத்து ஹேமச்சந்திரன் 3வது முறையாக நீட்தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமச்சந்திரன் மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் பிரியதர்ஷினி பார்த்தபோது ஹேமச்சந்திரன் அறை திறக்கவில்லை. ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இறப்பதற்கு முன் மாணவன் எழுதிய  கடிதத்தில் “நாம் அனைவரும் ஒரே இடத்தில் வசித்தாலும் நான் மட்டும் தனியாக உள்ளேன். நான் இதுவரையிலும் வாழவே இல்லை. ஆகவே வெளியேறி விடுகிறேன். என் அம்மாவை யாரும் குறை கூறவேண்டாம். இது என் முடிவு” என குறிப்பிடப்பட்டிருந்தது.