புனே அருகே ஹின்ஜாவாடியில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் (அங்கன்வாடி) நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டிய இடமே, சில நேரம் ‘பூட்டிய அறை’ஆக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு, அங்கன்வாடி எண் 3–இல் சுமார் 20 குழந்தைகள் உட்புறம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. வெளியில் வந்த வீடியோவில், குழந்தைகள் அழுது பயந்து நிற்கும் காட்சிகள் காணப்பட்டதால், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த சம்பவம் குழந்தைகளின் மனநிலையில் நீண்டகால பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்பதால், நெட்டிசன்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

சம்பவத்திற்குப் பொறுப்பான அங்கன்வாடி பணியாளர் சவிதா ஷிண்டே மற்றும் உதவியாளர் ஷில்பா சாகரே ஆகியோர், கிராம பஞ்சாயத்தில் நடந்த ‘முக்கிய கூட்டத்திற்கு’ அழைக்கப்பட்டதால், குழந்தைகளை உள்ளே பூட்டிவிட்டு சென்றதாக விளக்கம் அளித்துள்ளனர்.

கிராம பஞ்சாயத்தின் முன்னாள் சர்பஞ்ச் ஒருவர் கூட்டத்தை அழைத்திருந்ததாகவும், வருகை அவசியம் என சொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளதால், இது தொடர்பாக புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால் குழந்தைகளை கண்காணிப்பின்றி பூட்டிய நிலையில் விட்டு வெளியேறுவது மிகப்பெரும் பொறுப்பின்மை என பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.