ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இனி ‘பாதுகாப்பு அப்டேட்கள்’ (Security Updates) வழங்கப்படமாட்டாது என கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பயனர்கள் தங்களது தரவுகளின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (iOS) தளத்தை விட, கூகுளின் ‘ஆல்பபெட்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் உள்ள தனிநபர் தரவுகள், வங்கி விவரங்கள் ஆகியவற்றை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, கூகுள் நிறுவனம் அவ்வப்போது மென்பொருள் பாதுகாப்பு அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, ஆண்ட்ராய்டு 12 (Android 12) மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளைக் கொண்ட போன்களுக்கு இனி இத்தகைய பாதுகாப்பு ஆதரவு கிடைக்காது.
இதன் காரணமாக, பழைய மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களின் போன்கள் எளிதில் ஹேக்கர்களால் ஊடுருவப்படவும், தரவுகள் திருடப்படவும் வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சைபர் தாக்குதல்கள் மற்றும் டேட்டா திருட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, பயனர்கள் உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கூகுள் கேட்டுக்கொண்டுள்ளது:
மென்பொருள் அப்டேட்: உங்கள் ஸ்மார்ட்போனில் புதிய பதிப்பு (Android 13 அல்லது அதற்கு மேல்) அப்டேட் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்த்து, உடனடியாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
புதிய சாதனங்கள்: ஒருவேளை உங்கள் போன் மிகவும் பழையதாக இருந்து, அதில் புதிய அப்டேட்கள் வரவில்லை எனில், பாதுகாப்பு கருதி புதிய தொழில்நுட்பம் கொண்ட போன்களுக்கு மாறுவது சிறந்தது.
மென்பொருள் மேம்படுத்தல் மூலம் மட்டுமே இணையவழி அச்சுறுத்தல்களைத் தவிர்க்க முடியும் என்பதால், பயனர்கள் இந்த அறிவிப்பை அலட்சியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
