வீடுகளில் நாய், பூனை, பறவை, மீன் போன்ற செல்லப்பிராணிகள் குடும்பத்தின் அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அவை திடீரென உயிரிழந்தால் உரிமையாளர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்குவார்கள். அந்த துயரத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று சீனாவில் செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் செயல்படும் மோசடிக்காரர்கள், “இறந்துபோன செல்லப்பிராணியின் ஆன்மாவுடன் பேசலாம்” என உரிமையாளர்களை ஏமாற்றுகின்றனர். 5 கேள்விகள் கேட்க 128 யுவான் (சுமார் ரூ.1,500), 6 மாதங்கள் தொடர்ந்து பேச 2,999 யுவான் (சுமார் ரூ.36,800), மறுபிறவி எடுத்துள்ளதா என தெரிந்துகொள்ள 1,899 யுவான் (சுமார் ரூ.22,800) வரை வசூல் செய்கிறார்கள். இதனால் பலர் ஏமாற்றத்திற்குள்ளாகி பணத்தை இழந்துள்ளனர்.

செல்லப்பிராணி உரிமையாளர்கள் வெளியிடும் சமூக வலைதள பதிவுகளை சேகரித்து, அதற்கேற்றவாறு பதில்களை அமைத்து, “உங்கள் செல்லப்பிராணி தான் பேசுகிறது” என பாசாங்கு செய்கின்றனர். சிலர் உணர்ந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தற்போது, இந்த மோசடி விவகாரம் சீன சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.