இங்கிலாந்து லங்காஷைர் மாநிலம் பிளாக்பர்ன் நகரில் உள்ள விட்டன் கன்ட்ரி பூங்காவில் நடந்த துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது கணவர் வாசிம் கான், 9 வயது மகன், 5 வயது மகள் ஆகியோருடன் பூங்காவுக்கு சென்ற மடியா கவுசர் (32), மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் பலியானார். சம்பவம் நடந்தபோது, கவுசர் தனது மகளை மடியில் தாங்கியிருந்தார். மரம் விழும் முன் அவர் கடைசி நேரத்தில் தனது மகளை தூரம் தள்ளி உயிரைக் காப்பாற்றியிருந்தாலும், அவர் தப்பிக்க முடியாமல் போனது.

அந்த நேரத்தில் மகனுடன் கால்பந்து விளையாடி வந்த வாசிம் கான், ஓடிச்சென்று மனைவியை காப்பாற்ற போராடியதாக தெரிவித்தார். “மரம் திடீரென முறிந்து விழும் சத்தம் கேட்டது. அப்போது காற்று கூட வீசவில்லை. வேறு எதுவும் நடக்கவில்லை. அவளை காப்பாற்ற முயன்றேன். அந்த நேரத்தில் அவள் இன்னும் உயிருடன் இருந்தாள்,” என கண்ணீருடன் கூறியுள்ளார். தனது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அளவற்ற அன்பு பெற்றவர் தான் கவுசர் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்ததையடுத்து பூங்கா நிர்வாகம், அங்கு இருந்த மரங்களின் கிளைகளை முன்னெச்சரிக்கையாக வெட்டியது. கவுசரின் இறுதி சடங்கு கடந்த புதன்கிழமை மதியம் நடைபெற்றது. லண்டன், பிர்மிங்ஹாம், பிராட்போர்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் திரளாக வந்து பங்கேற்றனர். சமூக வலைதளங்களில் அவரது தியாகம் மற்றும் குழந்தையை காப்பாற்றிய வீரத் தன்மை குறித்து பெருமை கலந்த அஞ்சலிகள் தெரிவிக்கப்படுகின்றன.