லக்னோவின் அடையாளங்களில் ஒன்றான கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசார்களைச் சுற்றியுள்ள சட்டப் போராட்டம் இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
லக்னோவில் உள்ள சௌக் பகுதியில் செயல்படும் குவீன் மேரி மருத்துவமனைக்கு (Queen Mary Hospital) அருகே ஷேக் ஃபரிதுல் ஹக் என்பவரது மசார் அமைந்துள்ளது.
இதனை அகற்றக்கோரி கே.ஜி.எம்.யு நிர்வாகம் தற்போது நோட்டீஸ் ஒட்டியுள்ளது. “இது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட மசார், 15 நாட்களுக்குள் நீங்களாகவே அகற்ற வேண்டும்; இல்லையெனில் நிர்வாகமே அகற்றும், அதற்கான செலவையும் உங்களிடமே வசூலிப்போம்” என அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மசாரைப் பராமரிப்பவர்கள் கூறுகையில், “இது 600 ஆண்டுகள் பழமையானது, எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாகப் பராமரித்து வருகிறது; இங்கு அனைத்து மதத்தினரும் வந்து செல்கிறார்கள்” என்கின்றனர்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, “இது 40 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம்; உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நடவடிக்கை எடுக்கிறோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மொத்தம் 5 மசார்களுக்கு இதுபோன்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால் லக்னோவில் பதற்றம் நிலவுகிறது.
