தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மற்றும் மத மோதல்களைத் தடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி திருச்சியில் கடந்த 2-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’, மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது.
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில், துரை வைகோ எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், தமிழக மக்களுக்காக இதுவரை 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடந்துள்ள வைகோ, திரையில் தோன்றும் நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு நிஜ ஹீரோவாகத் திகழ்வதாகப் பாராட்டினார்.
மேலும், தமிழகத்தில் சமூக நீதி ஆட்சி சரியான பாதையில் செல்வதாகவும், உலகிற்கு முன்மாதிரியாகத் திகழும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
