தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் (TPCC), எம்.எல்.சி-யுமான பொம்மா மகேஷ் குமார் கவுட், அரசியல் லாபங்களுக்காக பாஜக மத உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

“கடவுள் ராமர் என்ன பாஜக-வில் உறுப்பினராகிவிட்டாரா? எதற்கெடுத்தாலும் ராமரின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்வது முறையல்ல” என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அமைதியான சூழலைச் சீர்குலைக்கும் வகையில் மதத்தின் பெயரால் பாஜக வாக்குக் கேட்பதாகவும் அவர் சாடினார்.
சாதி மற்றும் மதப் பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற அரசியலை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், வளர்ச்சி சார்ந்த ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியின்போது வலியுறுத்தினார்.
