நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சவுமியராஜ் என்பவருக்கும், அவரது பக்கத்து நிலத்துக்காரர் முத்துசாமி என்பவருக்கும் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை நீடித்து வந்தது. இது தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கைத் தனக்கு சாதகமாக முடித்துத் தருவதற்கும், அடுத்தகட்ட மேல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதற்கும் நல்லூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரன் (53) விவசாயி சவுமியராஜிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சவுமியராஜ், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் காவல்துறையிடம் உடனடியாகப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு விவசாயி சவுமியராஜ் நல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்குப் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
காவல் நிலைய வளாகத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்ட இச்சம்பவம், காவல் துறை வட்டாரத்திலும் அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சத்திற்கு எதிராகத் துணிச்சலாகச் செயல்பட்ட விவசாயியின் நடவடிக்கையைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
