இந்திய ரயில்களில் இடஒதுக்கீடு செய்த பயணிகளுக்கும், பொதுப் பயணிகளுக்கும் இடையே இடப்பற்றாக்குறை காரணமாக இடையூறுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் குவாலியரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஒரு பயணி, தனது ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கை மற்றொரு பயணியால் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் X  பக்கத்தில் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், ஸ்லீப்பர் பெட்டியில் பயணிகள் நெருக்கடியாக நின்று பயணிக்கும் காட்சி உள்ளது. புகார் தெரிவித்த பயணி கூறியதாவது, “எனது சீட்டில் ஒருவர் உட்கார்ந்துள்ளார். TTEயை கேட்டும் அந்த இடத்தை காலி  செய்யவில்லை” எனக் கூறியுள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவ, இது போன்ற நிலைகளை பலர் கண்டிக்கத் தொடங்கினர்.

இதற்கு பதிலளித்த ரயில்வேசேவா அதிகாரப்பூர்வ X கணக்கு, பயணிக்கு “உங்கள் அனுபவத்திற்கு வருந்துகிறோம். தயவுசெய்து உங்கள் PNR எண் மற்றும் கைபேசி எண்ணை டைரக்ட் மெசேஜ் மூலம் தெரிவிக்கவும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என பதில் அளித்துள்ளது.

இதில், ஒதுக்கீடு செய்த பயணிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பும், தங்களுக்குரிய உரிமையை பெற முடியாத நிலையும் மீண்டும் கவனத்தில் வருகிறது. இது போன்ற பிரச்சனைகள் தொடருமானால், பயணிகள் எதிர்காலத்தில் ரயில்வே சேவையைப் பயன்படுத்த விரும்ப மறுக்கும் நிலை உருவாகலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.