உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசி டோலா மொஹல்லா பகுதியைச் சேர்ந்த பப்பூ டோஹ்ரே என்ற நபர், 2023-ம் ஆண்டு தனது மனைவி குட்டி தேவியை 14 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார்.

அந்த சம்பவத்தில் இரண்டு மாதங்கள் உயிருக்கு போராடிய மனைவி உயிர் பிழைத்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பப்பூ, சமீபத்தில் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பப்பூ, தனது மனைவியை மீண்டும் குறிவைத்து தாக்கிய சம்பவம் இப்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரயில் பாதை அருகே சந்தித்த பப்பூ, தனது மனைவியை வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்துச் சென்று அவரது மூக்கை பற்களால் கடித்து கொடூரமாக காயப்படுத்தினார். இந்தச் சம்பவத்தின் பின்னர், காயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான பப்புவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணை தொடர்ந்து இவ்வாறு தாக்குவது சமூக நீதிக்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரான செயல் என்றொரு விமர்சனமும் கிளம்பியுள்ளது. தற்போது காவல்துறையினர் பப்புவை விரைந்து கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.