டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியை விட நியூசிலாந்து அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் கொண்டவை என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டி குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், இந்திய அணியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசுகையில், இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஆனால், நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.” இந்திய அணியின் தனிநபர் ஆட்டத்தை விட, நியூசிலாந்து அணியின் கூட்டு முயற்சிசிறப்பாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றவே அதிக வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.
மேலும் அமீரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் பும்ராவின் ஃபார்ம் இந்தியாவிற்கு வலுசேர்க்கும் என்றாலும், மற்ற வீரர்களும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
