டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில், தொடரிலிருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளின் வீரர்கள் இன்னும் தாயகம் திரும்ப முடியாமல் கொல்கத்தாவில் தவித்து வருகின்றனர். ஐசிசி-யின் செயல்பாடுகளில் உள்ள பாரபட்சம் குறித்து தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் வெளிப்படையாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர்கள் எந்தச் சிக்கலுமின்றி தங்கள் நாட்டுக்குத் திரும்பும் நிலையில், தாங்கள் மட்டும் ஏன் இன்னும் கொல்கத்தாவிலேயே முடங்கிக் கிடக்கிறோம் என்று டி காக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“ஐசிசி தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் கிடைக்கவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது. இங்கிலாந்து அணி எங்களை விட முன்னதாகவே தாயகம் திரும்புகையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் மட்டும் இன்னும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருளில் இருக்கிறோம்” என்று ஐசிசி-யின் நிர்வாகத் திறமையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
PLAYERS WANT TO LEAVE INDIA ASAP. 🤯
– Quinton de Kock and David Miller are absolutely furious with the ICC. pic.twitter.com/Wc9LmlChla
— Sheri. (@CallMeSheri1_) March 7, 2026
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்தப் பிராந்தியத்தின் வான்வெளிப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டு, வீரர்களைத் தாயகம் அனுப்ப ஐசிசி மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வீரர்கள் அனுபவித்து வரும் இந்த இக்கட்டான நிலை குறித்து ஐசிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து முடங்கியிருந்தாலும், சிக்கலில் உள்ள வீரர்களை விரைவில் அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கத் தேவையான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வீரர்கள் எவ்வித கவலையும் அடைய வேண்டாம் என்றும் ஐசிசி உறுதி அளித்துள்ளது.
கிரிக்கெட் உலகக்கோப்பை போன்ற பிரம்மாண்டமான தொடரை நடத்தும் ஐசிசி, வீரர்கள் தாயகம் திரும்புவதில் காட்டும் இந்தத் தொய்வு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
