புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அறிவுரார் வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 11 மணியளவில் தனது வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாசாலையில் ஸ்டேட் வங்கி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த நாய் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ், சாலையிலேயே மயங்கி விழுந்தார். அந்தச் சமயத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவ்வழியாகத் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

​சாலையில் ஒருவர் காயமடைந்து கிடப்பதைப் பார்த்த அமைச்சர், உடனடியாகத் தனது காரை நிறுத்தச் செய்து இறங்கினார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்த அவர், காயமடைந்தவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே, சாலையில் சிதறிக்கிடந்த ரமேஷின் பையை மீட்ட இளைஞர்கள், அங்கிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்தப் பையில் இருந்த 2.5 லட்ச ரூபாய் பணத்தை, காவல்துறையினர் ரமேஷின் மனைவி ஜெயந்தியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். விபத்தில் சிக்கியவருக்கு அமைச்சர் செய்த உதவியும், பணத்தை மீட்டுக் கொடுத்த இளைஞர்கள் மற்றும் காவல்துறையினரின் நேர்மையும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.