இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் சியரா லிலியன் என்ற அமெரிக்கப் பெண்மணி, ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து ஒரு காணொளியை வெளியிட்டார். இந்தியா என்றால் அழுக்கு மற்றும் ஏழ்மை மட்டுமே என்று வெளிநாட்டினர் நினைப்பதைப் பார்த்து அவர் வருத்தமடைந்தார். “இந்தியாவிலும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடியும். இங்கே எல்லா பெரிய கடைகளும் உள்ளன.
நான் வெறும் 4 அமெரிக்க டாலருக்கு (சுமார் ₹330) மசாஜ் செய்தேன். இந்தியாவின் மோசமான பகுதிகளை மட்டும் ஏன் மக்கள் காட்டுகிறார்கள்?” என்று அவர் அந்தக் காணொளியில் கேள்வி எழுப்பினார். சமூக வலைத்தளங்களில் அதிகப் பார்வைகளுக்காக, மோசமான இடங்களை மட்டுமே பலர் படம்பிடிப்பதாகவும், ஆனால் இந்தியாவின் உண்மையான அழகான, வசதியான மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் இடங்களை மறைப்பதாகவும் சியரா ஆதங்கப்பட்டார்.
பெங்களூரு போன்ற நவீன நகரங்கள், கேரளாவின் அழகிய பகுதிகள் ஆகியவற்றைப் பற்றிய காணொளிகள் ஏன் வைரலாவதில்லை என்றும் அவர் கேட்டார். இந்தக் காணொளியைப் பார்த்தவர்கள், “ஒரு வெளிநாட்டவர்தான் நமது நாட்டின் நல்ல பக்கத்தைக் காட்டுகிறார்,” என்று சியராவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
