சமூக வலைதளங்களில் தற்போது யானை ஒன்று முதியவர் ஒருவரின் முதுகின் மேல் அமர்ந்திருப்பது போன்ற ஒரு காணொளி வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஸியான சாலை ஒன்றில் கார்களும் மக்களும் நின்று கொண்டிருக்க, நடுச்சாலையில் யானை ஒன்று ஒரு முதியவரை சோபா செட் போல நினைத்து அவர் மேல் அமர்ந்திருப்பதும், அந்தப் பாரம் தாங்காமல் அவர் தவிப்பதும் போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. அங்கிருந்தவர்கள் அவருக்கு உதவ முன்வராமல், தங்கள் கைபேசியில் வீடியோ எடுப்பதிலேயே மும்முரமாக இருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

​இருப்பினும், இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது பார்ப்பதற்கு நிஜமான வீடியோ போலத் தெரிந்தாலும், உண்மையில் இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோ என்று பல பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யானையின் உடல்வாகு மற்றும் அந்த இடத்தின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது இது போலியானது என்று தெரிந்தாலும், ஒரு மனிதன் ஆபத்தில் இருக்கும்போது உதவாமல் வேடிக்கை பார்க்கும் இன்றைய சமூகத்தின் மனநிலையை இந்த வீடியோ பிரதிபலிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.