நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், சென்சார் எனப்படும் தணிக்கை வாரியத்தின் பல்வேறு சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக ரிலீசுக்குத் தயாராகியுள்ளது. முன்னதாக, இந்தப் படத்தில் சுமார் 15 இடங்களில் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதனை ஏற்காத படக்குழு, மறுஆய்வுக் குழுவை அணுகி முறையிட்டது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

​தற்போது தணிக்கை வாரியத்துடனான இந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளதால், நாளை (ஜனவரி 10) திரையரங்குகளில் இப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் படத்திற்கான முன்பதிவு (Booking) மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்தத் தகவலை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.