தமிழக அரசியலில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழகம் தற்போது ஒருவித அரசியல் குழப்பத்தில் இருக்கலாம், ஆனால் “எழுச்சித் தமிழர் திருமாவளவன் ஒரு தெளிந்த நீரோடை போன்றவர்” என்று பதிவிட்டுள்ள அவர், காலத்தின் மாற்றத்திற்கேற்ப செதுக்கப்படும் இமயமலை அவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

குறிப்பாக, “நாளைய பொழுது நமக்காய் விடியும்” என அவர் குறிப்பிட்டிருப்பது, தவெக ஆட்சி அமைக்க விசிகவின் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் தரப்புக்கு ஒரு நேர்மறையான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை ஒருபுறம் இருந்தாலும், திருமாவளவனின் அரசியல் நகர்வுகள் தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றும் என சிந்தனை செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை விஜய் வழங்கியுள்ள சூழலில், விசிகவின் இந்த ‘விடியல்’ பதிவு கோட்டையை நோக்கி தளபதி எடுத்து வைக்கும் அடுத்த அடியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.