உலகிலேயே நாய் இறைச்சி நுகர்வில் தென் கொரியா மற்றும் வியட்நாமுக்கு அடுத்தபடியாக நைஜீரியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிரிக்காவிலேயே நாய் இறைச்சி விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் இந்நாட்டில், இதற்கென ‘தவாக்கி’ (Dawaki) என்ற மிகப்பெரிய சந்தையே இயங்கி வருகிறது. இங்கே நாய்கள் உயிருடனும் அல்லது இறைச்சியாகவும் விற்கப்படுகின்றன. ஒரு நாயின் விலை அதன் அளவைப் பொறுத்து சுமார் 1,000 முதல் 3,300 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக நைஜீரியாவின் தெற்குப் பகுதிகளில் ‘404’ என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படும் இந்த இறைச்சி, அங்குள்ள மக்களால் ஒரு சுவையான உணவாகக் கருதப்படுகிறது.
சுவைக்காக மட்டுமின்றி, மருத்துவக் குணங்கள் மற்றும் ஆன்மீகப் பாதுகாப்புக்காகவும் இந்த இறைச்சியை உண்பதாக அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர். இருப்பினும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் திருடப்படுவதும், அவை மனிதாபிமானமற்ற முறையில் லாரிகளில் அடைத்து கொண்டு வரப்படுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முறையாகத் தடுப்பூசி போடப்படாத நாய்களை உண்பதால் ‘ரேபிஸ்’ (Rabies) போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வளவு ஆபத்துகள் இருந்தும், நைஜீரியச் சந்தைகளில் நாய் இறைச்சிக்கான தேவை குறையாமல் இருப்பது விலங்கு நல ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
