இத்தாலியின் சிசிலி பகுதியில் ஒரு நபர் தனது வளர்ப்பு நாய்க்கு விசித்திரமான முறையில் பயிற்சி அளித்து, பொது இடத்தில் குப்பை வீசப் பயன்படுத்திய அதிரடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் உள்ள குப்பை பைகளை வாயில் கவ்விக்கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் வீசிவிட்டு வருமாறு அந்த நாய்க்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குப்பை வரி மற்றும் அபராதங்களில் இருந்து தப்பிக்க அவர் செய்த இந்த ‘மாஸ்டர் பிளான்’, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அச்சு அசலாகப் பதிவானது. வாயில்லா ஜீவனை வைத்து அந்த நபர் செய்த இந்த வேலை அதிகாரிகளையே அதிர வைத்துள்ளது.

​சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரைத் தேடிக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவருக்கு மிகக் கடுமையான அபராதத்தை விதித்துள்ளனர். இத்தாலிய சட்டப்படி இத்தகைய குற்றங்களுக்கு 1,500 யூரோ முதல் 18,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் முதல் 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை அவர் அபராதம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். விசுவாசமான நாயின் புத்திசாலித்தனத்தைத் தவறான காரியத்திற்குப் பயன்படுத்திய அந்த எஜமானருக்கு, இந்த அபராதம் ஒரு வாழ்நாள் பாடமாக அமைந்துள்ளது.