தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மயிலாப்பூரில் அதிரடியாகத் தொடங்கினார். அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசைதான் பாஜக வேட்பாளராகக் களம் இறங்குகிறாரா என்ற கேள்வி எழுந்து, சமூக வலைதளங்களில் தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இருப்பினும், இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், “அண்ணன் எடப்பாடியார் அழைத்ததன் பேரிலேயே இந்தப் பிரசாரத்தில் கலந்துகொண்டேன்” என்று கூறினார்.

மயிலாப்பூர் தொகுதிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளரை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணி மயிலாப்பூரில் பிரசாரத்தைத் தொடங்கியது, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.