சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ‘ஆரஞ்சு கேப்’ வென்ற 15 வயது இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 1 முதல் தொடங்குகிறது.
இந்தச் சூழலில், அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலாவது சூர்யவன்ஷிக்கு சீனியர் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே வலுத்து வருகிறது. இந்த அதிரடி வீரரை உடனடியாக அணியில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ள நிலையில், முன்னாள் டெஸ்ட் நிபுணரான சேதேஸ்வர் புஜாரா முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்குப் பேசிய புஜாரா, “வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பும் விளம்பரமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு இளம் வீரராக, தன்னைப்பற்றி வெளியே பேசப்படும் விஷயங்களில் அவர் கவனம் செலுத்தக்கூடாது. வெளி உலகச் சத்தங்களைத் தவிர்த்துவிட்டு, ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் அவருக்கு நல்லது. தற்போதைய சூழலில், இந்திய அணி நிர்வாகம் தங்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சாம்சன், அபிஷேக் மற்றும் இஷான் கிஷன் கூட்டணியை மாற்ற விரும்பும் என்று நான் நினைக்கவில்லை.
எனவே, முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வைபவ்வுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்காது என்று கூறியுள்ளார். மேலும், இந்திய அணி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு, வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் போது மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்றும், ஐபிஎல் தொடரில் செய்த சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் அப்படியே பிரதிபலிப்பது எளிதான காரியமல்ல என்றும் புஜாரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், வைபவ் சூர்யவன்ஷி சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி, இலங்கை ஏ அணிக்கு எதிராக தம்புள்ளாவில் வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து, 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த 2025-ல் இந்திய யு-19 அணியுடன் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 71 சராசரியுடன் 174 ஸ்ட்ரைக் ரேட்டில் 355 ரன்கள் குவித்து அசத்திய அனுபவமும் அவருக்கு உள்ளது. இதனால், இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய நிர்வாகம் அவரைப் பக்குவப்படுத்தும் வரை காத்திருக்க வைக்குமா அல்லது களமிறக்கி அதிரடி காட்டுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
