தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 107 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.), காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், த.வெ.க. ஆட்சியைப் கவிழ்க்க எதிர்க்கட்சியான தி.மு.க. தீவிரமான குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வான இளையராஜாவை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் திருநாவுக்கரசர் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்தின் போது, ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்றும், அதற்குச் சன்மானமாக ரூ.35 கோடி தருவதாகவும் ஆசைவார்த்தை காட்டியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ. இளையராஜா போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், மேலும் 14 த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடமும் இதேபோன்று பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகவும், இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் தொலைபேசியில் பேசினார் என்றும் ஐ.யு.எம்.எல். தேசிய தலைவர் காதர் மொய்தீன் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், “தமிழகத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம், 100 சதவீதம் தயாராக இருங்கள்” என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதன் பின்னணியில் இந்த ஆட்சி கவிழ்ப்பு சதி வலை பின்னப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மற்றும் குதிரை பேரக் சதித்திட்டத்தை முன்கூட்டியே மோப்பம் பிடித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கடந்த 29-ஆம் தேதி ஆளுநர் அர்லேக்கரை கிண்டி மக்கள் மாளிகையில் ரகசியமாகச் சந்தித்துப் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, “சட்ட ரீதியாக எந்த உதவியையும் செய்ய நான் தயார், ஆனால் மாற்று வழியில் உதவ முடியாது” என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், த.வெ.க. அரசைத் தக்கவைக்க முதல்வர் எடுத்து வரும் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது.