பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது அணியினரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது. ‘மாம்பழம்’ சின்னமும் அவருக்கே கிடைத்துள்ள நிலையில், டாக்டர் ராமதாஸ் சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது மயக்கமடைந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ், அங்கிருந்தபடி தொண்டர்களுக்கும் மக்களுக்கும் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் ராமதாஸ் பேசியிருப்பதாவது, அன்புமணி தலைமையிலான அணி மக்கள் சேவைக்காக அன்றி, அதிகாரம் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நான் வளர்த்த பிள்ளைகள் பணத்திற்காகத் துரோகக் கூட்டத்தில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. நாடாளுமன்றத்திற்கு மிகக் குறைந்த நாட்களே சென்றவர் அன்புமணி. தேர்தல் களத்தைக் காண அஞ்சி, தனது மனைவியை வேட்பாளராக நிறுத்திவிட்டு பின்னணியில் இருந்து அதிகாரத்தைத் தேடுகிறார்.
நான் உடல்நலக்குறைவால் சேலத்தில் உயிருக்குப்போராடிய நிலையில், ஒரு வார்த்தை கூட நலம் விசாரிக்க வராதவர் அன்புமணி. பிறந்தநாள், திருமண நாள் போன்ற தருணங்களில் கூட ஒரு மகனாக அவர் தனது கடமையைச் செய்ததில்லை. “அன்புமணி கும்பல் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவர்கள் சட்டமன்றத்திற்குச் சென்றால் உங்களுக்காகப் பேச மாட்டார்கள். பணம் பண்ணும் வித்தையைத்தான் காட்டுவார்கள். எனவே, இந்தத் துரோகக் கும்பலை நிராகரியுங்கள். என்று டாக்டர் ராமதாஸ் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சௌமியா அன்புமணியையும் கட்டாயமாக தேர்தலில் வீழ்த்த வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்..
