கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, அலுவலகத்திற்கு வர முடியாத சூழலில் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி கேட்ட ஊழியரை, அவரது மேலாளர் அவமதித்த சம்பவம் இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழையினால் தன் பகுதி முழுவதும் நீரில் மூழ்கியிருந்ததால், அலுவலகத்திற்கு வரப் பாதுகாப்பான வழி இல்லை என்று ஊழியர் விளக்கியபோதும், “நான் வருகிறேன், உன்னால் ஏன் வர முடியாது?” என்று மேலாளர் அலட்சியமாகக் கேட்டுள்ளார்.
தான் அலுவலகத்திலிருந்து வெகுதொலைவில் வசிப்பதையும், மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதையும் அந்த ஊழியர் சுட்டிக்காட்டியும், மேலாளர் அதை ஊழியரின் அர்ப்பணிப்புத் தன்மையுடன் ஒப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அந்த ஊழியர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டுகள், மேலாளரின் விஷத்தன்மையான செயல்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. பணி நேரத்திற்குப் பிறகும் தொடர்ந்து செய்திகளை அனுப்பி, ஊழியரின் தனிப்பட்ட நேரத்திற்குச் சிறிதும் மதிப்பளிக்காத அந்த மேலாளரின் அணுகுமுறைக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
https://www.reddit.com/r/IndianWorkplace/s/086BQaVlnD
“வேலைக்கு மேல் தனிப்பட்ட மரியாதை முக்கியம், இது போன்ற நச்சுத்தன்மை கொண்ட வேலையிடத்தை விட்டு வெளியேறுவதே சிறந்தது” என்று பலரும் அந்த ஊழியருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தகைய மேலாளர்களின் குறுகிய மனப்பான்மை ஊழியர்களின் மனநலத்தைப் பாதிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
