பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜம்மு-காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைமையிலான இந்தப் போராட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் பகுதிகளைப் பயங்கரவாதப் பகுதிகளாகப் பாகிஸ்தான் அறிவித்ததைக் கண்டித்துள்ள உள்ளூர் தலைவர்கள், ஜூலை 15-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இருந்து சுதந்திரத்தை அறிவிப்போம் என எச்சரித்துள்ளனர். இதற்காகத் தங்கள் மீதான அடக்குமுறைகளை உலகுக்கு வெளிப்படுத்த அந்நாட்டு மக்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 30 பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து, இந்த போராட்டம் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையாகக் கருதப்பட்டு பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜூலை 27-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தங்கள் 38 அம்ச பொருளாதார மற்றும் அரசியலமைப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் பிடிவாதமாக உள்ளனர்.
தற்போது 17,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தாலும், பாகிஸ்தான் அரசின் அத்துமீறல்களுக்குப் பணியப் போவதில்லை என்று மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
