இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதில் பெயர்பெற்றவர். தற்போது ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள யோக்ராஜ் சிங், அவர்களை ‘இளம் வீரர்கள்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இன்னும் இளைஞர்கள்தான். இந்த வயதிலேயே அவர்கள் கிரிக்கெட்டை விட்டு விலக நினைப்பது துரதிர்ஷ்டவசமானது. 50 வயதானாலும் உங்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்றால், உங்களை யாராலும் அணியிலிருந்து நீக்க முடியாது. நம் நாட்டில் வயதை ஒரு காரணியாகப் பார்ப்பது வேடிக்கையாக உள்ளது,” எனத் தெரிவித்தார்.

அதே சமயம், 44 வயதிலும் உடற்தகுதியுடன் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனியை யோகராஜ் சிங் வெகுவாகப் பாராட்டியுள்ளார். “தோனி இன்னும் 10 ஆண்டுகளுக்கு விளையாட வேண்டும். அவரது அர்ப்பணிப்பும், உடற்தகுதியும் அபாரமானது. அவரது மணிக்கட்டு தசைகளைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அவரை ஓய்வு பெறச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை,” என அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும் வயது என்பது வெறும் எண்தான் என்பதை விளக்கும் வகையில், தனது குடும்பத்தைப் பற்றிய ஒரு ரகசியத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். “எனது தந்தை தனது 60-வது வயதில், 19 வயதே ஆன எனது தாயைத் திருமணம் செய்துகொண்டார். நான் பிறந்தபோது எனது தந்தைக்கு 72 வயது. அப்படி இருக்கும்போது இங்கே வயதைப் பற்றிப் பேசுவது தேவையற்றது,” என்று அதிரடியாகக் கூறினார்.