வங்கதேசத்தில் இந்தியப் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டிகளைத் தங்குதடையின்றி நேரலையில் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் விளையாடி வந்தார். அவரை பிசிசிஐ (BCCI) அணியிலிருந்து நீக்கியதாகக் கூறப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டில் அப்பொழுது பதவியிலிருந்த இடைக்கால அரசு, ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்திருந்தது.

தற்போது வங்கதேசத்தில் அமைந்துள்ள புதிய அரசு, முந்தைய அரசு விதித்திருந்த இந்தத் தடையை மறுபரிசீலனை செய்து அதனை ரத்து செய்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வம் மற்றும் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் இந்தியாவில் விளையாட மாட்டோம் எனக்கூறி ஏற்கனவே வங்கதேசம் டி20 உலக கோப்பையை புறக்கணித்த நிலையில் அது தவறு என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது ஐபிஎல் மீதான தடைகளை நீக்கி உள்ளது புத்திசாலித்தனமான யோசனையாகவே பார்க்கப்படுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.