இந்திய நீதித்துறையின் தாமதத்திற்கும், போதிய ஆதாரங்களின்றி சட்டத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் அவல நிலைக்கும் மிகச்சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது சத்தீஸ்கரைச் சேர்ந்த பிராஜு என்ற நபரின் வாழ்க்கை.

மேலும் செய்யாத குற்றத்திற்காக 50 வழக்குகளில் சேர்க்கப்பட்டு, தனது வாழ்நாளின் பொன்னான 13 ஆண்டுகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்த அந்த மனிதன், தற்போது நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்தபிறகும் அவரால் நிம்மதியாக மூச்சுவிட முடியவில்லை; “நான் செய்த குற்றம்தான் என்ன? என் வாழ்க்கையின் 13 வருடங்களை எனக்கு யாரால் திருப்பித் தர முடியும்?” என்ற அவரது ஆதங்கமான கேள்வி, நம் சட்ட அமைப்பின் கோர முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு பிடிபட்ட பிராஜு மீது, அடுத்தடுத்து திருட்டு, கொள்ளை என வரிசையாக 50 வழக்குகள் காவல்துறை சார்பில் சுமத்தப்பட்டன. விசாரணைக் கைதியாகவே சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, சரியான சட்ட உதவியோ அல்லது முறையான விசாரணை வாய்ப்புகளோ கிடைக்காததால், ஆண்டுகள் ஒவ்வொன்றாக நகர்ந்தன.

ஒவ்வொரு வழக்கிலும் சாட்சியங்கள் இல்லாத நிலையிலும், காவல்துறையின் வலுவற்ற குற்றச்சாட்டுகளாலும் வழக்கு விசாரணை பல ஆண்டுகள் நீடித்தது. இறுதியில், அனைத்து வழக்குகளிலிருந்தும் அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட முழுதாக 13 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. ஒரு மனிதனின் இளமைக்காலமும், அவனது குடும்பத்தின் எதிர்காலமும் சிறைக்கூடத்தின் நா நான்கு சுவர்களுக்குள்ளேயே கரைந்துபோயின.

விடுதலையாகி வெளியே வந்த பிராஜுவை சமூகம் பார்க்கும் பார்வையும், இழந்துபோன அவரது வாழ்க்கையும் மீள முடியாத வடுக்களாகவே மாறியுள்ளன. செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகும், அவருக்கு எந்தவித இழப்பீடோ அல்லது வாழ்வாதாரத்திற்கான வழியோ சட்டத்தின் முன் உத்தரவாதம் செய்யப்படவில்லை. வழக்குகள் முடிந்து அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், “குற்றவாளி” என்ற முத்திரை அவரது வாழ்நாள் முழுமைக்கும் அழிக்க முடியாத கறையாக மாறிவிட்டது.

மேலும் நீதிக்காகப் போராடி ஜெயித்துவிட்டதாகச் சொன்னாலும், ஒரு மனிதனின் வாழ்நாளை அநியாயமாகப் பறித்த இந்தச் சட்டத் தாமதத்திற்கு யார் பொறுப்பேற்பது என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களிலும் மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் பூதாகரமாக வெடித்துள்ளது.