திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தான் கூறவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் அவர் பேசிய கருத்து ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்து செய்தியாளர்களிடம் அவர் விரிவாகப் பேசினார்.
அப்போது அவர், “இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து கடமைகள் இருக்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்வதால், நமது ஆறாவது கடமையாக வாக்களிப்பதைக் கருத வேண்டும் என்றுதான் நான் கூறினேனே தவிர, திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதுதான் அந்த ஆறாவது கடமை என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த ஜனநாயகக் கடமையான வாக்குரிமை செலுத்துவதைப் பற்றி மட்டுமே தான் பேசியதாக அந்தச் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.
