பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலில், மாத சிறப்பு வழிபாட்டின் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டிருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோயில் அருகே ரயிலில் இருந்து இறங்கிய ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் வரிசையில் நுழைய முயன்றதால் கூட்ட நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது, அருகே இருந்த மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்து மின்சாரம் பாய்வதாக ஒரு வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடத் தொடங்கினர்.
வதந்தியால் எழுந்த பீதியில், மக்கள் அங்கிருந்த வயல்வெளியை நோக்கித் தப்பிக்க முயன்றபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிக்கப்பட்டனர். இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறியும் காயமடைந்தும் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை மீறிய கூட்டத்தால் அங்கிருந்த பாதுகாப்புக் தடுப்புகளும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கின.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அசம்பாவிதம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவையும் நிர்வாகம் அமைத்துள்ளது.
லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் புனித மாத விழாவில், போதுமான பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை ஏற்பாடுகளை நிர்வாகம் சரியாகச் செய்யவில்லை எனப் பலியானவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
