தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:  “தமிழை எனக்கு இலவசமாக கற்றுத்தந்த மூன்று வாத்தியார்கள் உள்ளனர். தமிழ் உச்சரிப்பை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவர் பேசிய உரைநடையை எழுதிய கலைஞர் கருணாநிதி மற்றும் கவிதைத் தமிழை கற்றுத்தந்த கவிஞர் கண்ணதாசன் எனக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்கள். அதனால் தான் ஒவ்வொரு மேடையிலும் ‘உயிரே, உறவே, தமிழே’ என்று முழங்குகிறேன்,” என்றார்.

திடீரென திசை மாற்றியதாக வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர்,
“நான் எந்தத் திசையும் மாறவில்லை. எனக்கு காட்டப்பட்ட ஒளி, காட்டிய பாதை — அதைத்தான் நான் பின்பற்றுகிறேன். அதனால்தான் மய்யம் உருவானது. இது அரசியல் சிக்கலாலும், சூழ்நிலை காரணமாகவும் எடுத்த முடிவு இல்லை. எங்கள் கொள்கைகளும் இவர்களுடைய கொள்கைகளும் ஒரே திசையில் செல்கின்றன,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, “நாங்கள் எழுப்பும் போர்குரல் திமுகவுக்கு எதிராக அல்ல. தேர்தலில் போட்டியிட்டாலும், நாம் முன்வைத்த பல கருத்துகளை திமுக அரசு செயல்படுத்தி காட்டியுள்ளது. எனவே நான் இவர்களுடன் சேர வேண்டுமா, அல்லது யார் என்றும் தெரியாதவர்களுடன் சேர வேண்டுமா என்ற சந்தேகத்திற்கே அரசியல் அறிவு தேவைப்படாது,” என்றார்.