பெங்களூரு அவலஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இஸ்ரோ அதிகாரி நாகேஸ்வர ராவ் (70), தனது மனைவி சந்தியா ஸ்ரீயை (60) துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவையே அதிரவைத்துள்ளது.
இந்த கொடூரத்தைச் செய்துவிட்டு தப்பியோட நினைக்காத நாகேஸ்வர ராவ், சடலத்தின் அருகிலேயே அமர்ந்து அக்கம் பக்கத்தினரிடம், “நானே என் மனைவியைக் கொன்றுவிட்டேன்” எனத் தானாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சொன்ன காரணம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. “எனக்கு வயதாகிவிட்டது, இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் தான் நான் உயிரோடு இருப்பேன். எங்களுக்கு பெங்களூருவில் நெருங்கிய சொந்தங்கள் யாரும் இல்லை.
எங்கள் ஒரே மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். நான் இறந்த பிறகு என் மனைவியைத் தனிமையில் யார் கவனிப்பார்கள் என்ற பயத்தில் தான் அவளைக் கொன்றுவிட்டு நானும் சாக முடிவு செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாகேஸ்வர ராவ் கடந்த சில காலங்களாகவே கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதியோர்களின் தனிமையும், எதிர்காலம் குறித்த பயமும் எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. தற்போது நாகேஸ்வர ராவை கைது செய்துள்ள போலீசார், அமெரிக்காவில் இருக்கும் அவரது மகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
