சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஒரே நேரத்தில் 35 மாணவர்கள் தங்கள் கைகளை ப்ளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 21 மாணவர்கள் மற்றும் 14 மாணவிகள் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மாணவர்களின் கைகளில் காயங்கள் இருப்பதை கவனித்த பெற்றோர், உடனே பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஒரு மாணவர் செய்ததைப் பார்த்து மற்ற மாணவர்களும் அதேபோல் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு ஏதேனும் ஆபத்தான மொபைல் கேம் சவால்கள் காரணமா அல்லது போதைப் பொருள் பழக்கமா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆனால், மாணவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த ஆர்.டி.ஓ (SDM) நப் சிங், இது எந்தவிதமான ஆன்லைன் கேம் சவாலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் ஆழமானவை இல்லை என்றாலும், ஒரு மாதமாக இது குறித்து பள்ளி நிர்வாகம் கவனிக்காமல் இருந்தது பெற்றோரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு விபரீத எண்ணம் மாணவர்களுக்கு ஏன் வந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
