இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், ஈரான் மீதான போரில் அமெரிக்காவைத் தாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று மறுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதுமே தனது நாட்டின் நலன் கருதியே முடிவுகளை எடுப்பவர் என்றும், அவருக்கு யாரும் யோசனை சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இரு நாடுகளும் மிகுந்த ஒருங்கிணைப்போடு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.ஈரான் மீதான தாக்குதல்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை எட்டி வருவதாகவும், மக்கள் நினைப்பதை விட இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றும் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரானின் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பு மையங்கள் அழிக்கப்பட்டு வருவதால், இனி அவர்களால் பழையபடி செயல்பட முடியாது என்றும், ஈரான் தற்போது முன்னெப்போதையும் விட மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா இன்னும் பொதுவெளியில் தோன்றாததைச் சுட்டிக்காட்டிய நெதன்யாகு, அங்கு தற்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதே உறுதியாகத் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
மேலும், தான் கொல்லப்பட்டதாகப் பரவிய வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தான் நலமுடன் உயிரோடு இருப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
