மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ராணுவம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தப் பாதையைக் கடக்க முயன்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றிடமிருந்து சுமார் ரூ.18 கோடி வசூலிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம், அதாவது ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் எரிபொருள் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே முழுமையாக நம்பியுள்ளன. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இவ்வழியாகக் கடந்து செல்கிறது.
தற்போதைய போர்ச் சூழலைப் பயன்படுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள தனது ‘லாரக்’ தீவு அருகே ஈரான் ராணுவம் ஒரு பிரத்யேகப் பாதையை உருவாக்கியுள்ளது. தனது நேரடி மேற்பார்வையில் மட்டுமே கப்பல்கள் செல்ல வேண்டும் என ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது. இதனால் இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து வெகுவாகக் குறைந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச கடல்சார் தகவல் அமைப்பான ‘லாயிட்ஸ் லிஸ்ட்’ (Lloyd’s List) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் இந்தப் புதிய பாதையை இதுவரை இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 9 கப்பல்கள் பயன்படுத்தியுள்ளன.
இதில் ஒரு எண்ணெய் டேங்கர் கப்பல் மட்டும் சுமார் 18 கோடி ரூபாய் செலுத்திய பின்னரே அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச கடல்சார் விதிகளுக்கு எதிரானது என வல்லுநர்கள் எச்சரிக்கும் அதே வேளையில், எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
