ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் விவகாரத்தில், அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்க இந்தியா செயல்படாவிட்டால் வர்த்தக வரிகள் மேலும் உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் போர் சூழலில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவுகின்றன என்பது டிரம்பின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே இந்திய தயாரிப்புகளுக்கு 50 சதவீதத்திற்கும் மேல் டிரம்ப் வரி விதித்துள்ளார்

இந்த விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் உதவவில்லை என்றால், இந்தியா மீதான இறக்குமதி வரிகளை நாங்கள் மேலும் அதிகரிப்போம்.

பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த மனிதர். ஆனால் இந்த விவகாரத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவர்கள் தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால், விரைவில் வரிகள் உயர்த்தப்படும்.”

அமெரிக்காவின் இந்த அழுத்தங்களுக்கு மத்தியிலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. “எந்தவொரு வெளிப்புற அழுத்தத்திற்கும் பணிய மாட்டோம்; இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படும்” என இந்தியத் தரப்பில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிபர் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு, இந்திய – அமெரிக்க வர்த்தக உறவில் மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.