உத்தரப் பிரதேச மாநிலம் கதௌலி பகுதியில், மாப்பிள்ளை வேண்டாம் என மறுத்து இரு தோழிகள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதௌலி பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த இரு இளம்பெண்கள், கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் சந்தித்த இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் தன் பாலின காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், இருவரது வீடுகளிலும் அவர்களுக்கு திருமணம் செய்ய வரன் பார்க்கத் தொடங்கியபோது, தங்களுக்கு ஆண்கள் வேண்டாம் என்றும், இருவரும் ஒருவரையொருவர் திருமணம் செய்து வாழப் போவதாகவும் கூறி பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை அடுத்து இந்த விவகாரம் காவல் நிலையத்திற்குச் சென்றது. கடந்த திங்கள்கிழமை இரவு இரு பெண்களுக்கும் போலீசாரும் பெற்றோரும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எனினும், செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த இரு மாணவிகளும், தங்களை ஒன்றாக வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
பல மணி நேர பேச்சுவார்த்தை மற்றும் கவுன்சிலிங்கிற்குப் பிறகு, மாணவிகள் விதித்த சில நிபந்தனைகளுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இரண்டு பெண்களும் சட்டப்பூர்வமாக வயது வந்தவர்கள் என்பதால், தற்போதைக்கு சமரச அடிப்படையில் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
