உத்தரப் பிரதேச மாநிலம் கலந்தர்கடி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக தந்தை மற்றும் மனைவியை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோமின் என்பவருக்கும், சனா என்பவருக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணமான சில மாதங்களிலேயே மோமினின் தந்தை ரியாஜுதீனுக்கும், மருமகள் சனாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை மோமினின் தாய் கிஷ்பர் நேரில் பார்த்து கண்டித்தபோது, வீட்டை விட்டு துரத்திவிடுவதாக ரியாஜுதீன் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோமின், தனது மனைவியின் வாட்ஸ்அப் கணக்கை லேப்டாப்பில் இணைத்து, தந்தையும் மனைவியும் பேசிக்கொண்ட ரகசிய குறுஞ்செய்திகள் மற்றும் குரல் பதிவுகளைதொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த மே 10-ஆம் தேதி சனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சனாவிடம், இக்குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி மோமின் டிஎன்ஏ சர்ச்சை எழுப்பியுள்ளார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஆத்திரமடைந்த மோமின் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தந்தை ரியாஜுதீன் மற்றும் மனைவி சனா ஆகிய இருவரையும் சுட்டுக்கொன்றார்.

இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர், மோமின் தானே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலையாளி மோமினை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், கொலைக்கு ஆதாரமாக உள்ள வாட்ஸ்அப் சாட்டிங் விபரங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.