உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள கிராமத்தில், காதலனை திருமணம் செய்து கொண்ட 13 வயது சிறுமி, திருமணம் முடிந்த 26 நாட்களிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமி, தனது அக்கா வீட்டிற்குச் சென்றபோது விவேக் (18) என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் காதலுக்கு குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், சிறுமியின் பிடிவாதம் காரணமாக கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்திருந்த சிறுமி, திடீரென விஷம் அருந்தியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சிறுமியின் மரணத்தின் போது அவரது தாத்தா, சிறுமிக்கு 18 வயது என்று போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு சிறுமியின் அடையாள அட்டையை சோதித்துப் பார்த்தபோது, அவருக்கு 13 வயது மட்டுமே ஆகியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் கணவர் விவேக் கூறுகையில், கடந்த ஆண்டு சிறுமியின் தந்தை இறந்ததால் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், அடிக்கடி தந்தையின் நினைவாகவே பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து குடும்பத்தினர் தரப்பில் புகார் எதுவும் அளிக்கப்படாத நிலையிலும், தற்கொலை செய்து கொண்ட பெண் மைனர் (சிறுமி) என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
