ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்களை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர்ச் சூழலால், சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், பல முன்னணி ஓட்டல்களில் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. விநியோகம் சீரடையாவிட்டால் ஓட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்தச் சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்துக் கூறியதாவது, “வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுவது மிகப்பெரிய பொய். சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கும், ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் குறைவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இத்தகைய வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நானே ஒரு சிலிண்டர் விநியோகஸ்தர் (Gas Dealer) என்பதால் எனக்குத் தெரியும், சிலிண்டர் தட்டுப்பாடு என்பது கிடையாது. யாருக்காவது சிலிண்டர் தேவைப்பட்டால் சொல்லுங்கள், நானே தருகிறேன் என்றார்.

மேலும் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பாஜக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பரவி வரும் செய்திகள் குறித்துக் கேட்டபோது, “பாஜக, தவெகவுடன் எந்தவிதமான கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. ஊடகங்களில் வெளியாகும் அத்தகைய செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.