புதிதாக அமையவுள்ள தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்குமா என்ற கேள்விக்கு, விசிக தலைவர் திருமாவளவன் தனது திட்டவட்டமான தனிப்பட்ட கருத்தை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். கட்சியின் ஆன்லைன் உயர்நிலைக் குழு கூட்டத்தில், இடதுசாரிகளைப் போல வெளியில் இருந்து ஆதரவு தராமல், நாம் கட்டாயம் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, விசிக-வுக்கு சமூக அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றால் திருமாவளவன் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் துணை முதலமைச்சர் பதவியையாவது வாங்க வேண்டும் என்று தோழர்கள் ஆசைப்பட்டுள்ளனர்.

​இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் அவர்களும் திருமாவளவனுடன் கான்-காலில் (Conference Call) பேசி, “சார் நீங்க அமைச்சரவைக்கு வாங்க, கம்பர்ட்டா இருக்கலாம்” என்று அன்போடு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், “என்னுடைய பர்சனல் ஒப்பினியன் என்னவென்றால், விசிக அமைச்சரவையில் சேரக் கூடாது, நானும் தனிப்பட்ட முறையில் சேர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என திருமாவளவன் அதிரடியாக உடைத்துப் பேசியுள்ளார். எனினும், இது குறித்து கட்சியில் இன்னும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.