தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களுடன் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நாம் தமிழர் கட்சி ஆகியவை மோதும் நான்கு முனை போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
இந்த நிலையில், தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற்ற அதே நாளில், கோவையில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு, வள்ளிக்கும்மி நடனம் ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் நடைபெற்ற கோவை தெற்கு மாவட்ட மாநாட்டில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், அவர் கூறியதாவது: திரும்புமிடமெல்லாம் எம்பெருமான் முருகனின் கோவில்களும், இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளைகளான மலைப்பிரதேசங்களும் நிறைந்த கோயம்புத்தூர் மண்ணில் இன்றைய பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறுவது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
அளவில்லா அன்பிற்கும், மனம் கவரும் மரியாதையான பேச்சிற்கும் பெயர்போன கோயம்புத்தூர் மாவட்டம், தி.மு.க.வின் ஊழல் ஆட்சியால் உருக்குலைந்து கிடக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, கோவை விமான நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அமைந்துள்ளது. தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக அதிவேகமாக வளர்ந்து வந்த கோயம்புத்தூரை, பாலியல் குற்றங்களாலும் போதைப் பொருட்களாலும் முடக்கி வைத்துள்ள தி.மு.க.வை, அம்மாவட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் என்ன நோக்கத்தில் இந்த கூட்டணியை உருவாக்கினார்களோ, அதனை வெற்றி பெறச் செய்வதற்காக, நானும் அண்ணாமலையும் சேர்ந்து ஆடும் அரசியல் ஆட்டம் இனிமேல்தான் தொடங்க உள்ளது.
உத்தர பிரதேசத்தில் தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக பிரதமரே உத்தரவிட்டுள்ளார். ஆனால் தமிழகத்தில் ‘தமிழ், தமிழ்’ என்று கூறி தமிழை விற்பனை செய்யும் நிலை உள்ளது. மக்களுக்கு விடிவு இல்லை; தி.மு.க. குடும்பத்தினருக்கு மட்டுமே விடிவு உள்ளது. ‘விடியல் ஆட்சி’ என்று பெயரிடப்பட்டாலும், மக்களின் வாழ்க்கையில் இன்னும் இருட்டே நிலவுகிறது. தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த விடியலும் இல்லை.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.
