மேகாலய மாநிலம் ஷில்லாங்கிற்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷிக்கு ஷில்லாங் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் ராஜா ரகுவன்ஷி – சோனம் தம்பதியருக்குத் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக அசாம் மாநிலம் காமாக்யா கோயிலுக்குச் சென்ற அவர்கள், பின்னர் மேகாலயாவின் ஷில்லாங்கிற்குச் சென்றனர். மே 23-ஆம் தேதி அங்குள்ள மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றபோது இருவரும் மர்மமான முறையில் மாயமானார்கள்.
இதனைத் தொடர்ந்து ஜூன் 2-ஆம் தேதி, ராஜா ரகுவன்ஷியின் உடல் மலைப்பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சோனம், ஜூன் 9-ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தின் காஜிபூரில் உள்ள ஒரு உணவகத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் தனக்கு யாரோ மயக்க மருந்து கொடுத்து கடத்தியதாகக் கூறிய சோனம், பின்னர் காவல்துறையினரின் விசாரணையில் தனது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து கணவரைக் கொல்லத் திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக கடந்த 11 மாதங்களாக அவர் சிறையில் இருந்து வந்தார்.
ஜாமீன் கோரி சோனம் தாக்கல் செய்த மனுவில், தான் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், திருமண ஏற்பாடுகளை மிகவும் விரும்பிச் செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, சக குற்றவாளியான ராஜ் குஷ்வாஹாவுக்கும் எனக்கும் எந்தக் காதலும் இல்லை. அவர் எனக்கு அண்ணன் முறை போன்றவர்.எனது கணவர் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. அவரைக் கொல்ல வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது என்றார்.
இந்த வாதங்களைக் கேட்ட ஷில்லாங் நீதிமன்றம், 11 மாத சிறைவாசத்திற்குப் பிறகு தற்போது சோனத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
